×

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு சிரமமின்றி வழங்க வேண்டும்

*அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை : ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.புதுக்கோட்டை மீன்மார்க்கெட் அருகில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை எளிதான முறையில் வழங்கும் வகையில் 7ம்தேதி முதல் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 10ம்தேதி முதல் 13ம்தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.எனவே பொதுமக்கள் அனைவரும் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பெற்றிட, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரங்களில் நியாயவிலை கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது முதலமைச்சர் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி, ஆரோக்கியமான உணவுடன் கல்வி கற்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 20 பள்ளிகளில் 2,645 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், உணவின் கால அட்டவணையின் படியும், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப போதுமான அளவில் உணவுகள் தரமான முறையில் தயாரித்து வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுகளின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், இணைப் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, நகராட்சி ஆணையர் ஷியாமளா, வட்டாட்சியர் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு சிரமமின்றி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : District ,Pudukottai ,District Collector ,Mercy Ramya ,Pudukottai Fish Market ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி...